பங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள்? என்கிற கேள்விக்கு முதலில் பதில் தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற துறைகளில் கிடைக்கும் வருமானத்தைவிட பங்குச்சந்தை மூலம் கிடைக்கும் லாபம் அதிகம். அதற்கு நீங்கள் கொஞ்சமாவது உழைக்க வேண்டும். முதலில் உங்களை நீங்கள் ஒரு வியாபாரியாக மாற்றிக்கொள்ள வேண்டும். பங்குச்சந்தைக்கு நீங்கள் வருவதே வியாபாரம் செய்யத்தான். அந்த வியாபாரத்தை சரியாக செய்தீர்கள் எனில் லாபம் உங்களைத்தேடி வரும். தவறாக செய்தால் கையில் உள்ள பணம்தான் கரையும். கவனம் தேவை.
வியாபாரம் செய்ய முதலீடு வேண்டும். இயல்பான வாழ்க்கை வியாபாரத்தில் கடன் வாங்கலாம். லாபம் சம்பாதித்த பிறகு திரும்பத்தந்து விடலாம். ஆனால், பங்குச்சந்தையில் கடன் வாங்கி முதலீடு செய்து விடாதீர்கள். ஏனெனில் இங்கு ரிஸ்க் அதிகம். அதனால்தான் இந்த மூதலீட்டை 'ரிஸ்க் கேப்பிட்டல்' என்கிறோம். எனவே, இந்த ரிஸ்க்கை எடுக்கும் துணிச்சல்காரர்களுக்குத்தான் பங்குச்சந்தையில் வெற்றி கிடைக்கும். பங்குச்சந்தையில் வெற்றிபெற எளிய வழி, ஒரு நிறுவனத்தின் உற்பத்திப் பொருளுக்கு அல்லது சேவைகளுக்கு யார், யார்? வாடிக்கையாளர்கள். அவர்களின் ஆதரவு எதுநாள் வரை கிடைக்கும். நிறுவனத்தின் போட்டியாளர்கள் யார், அவர்களின் திறமை எப்படி? அந்த நிறுவனம் சார்ந்த துறையின் எதிர்காலம் எப்படியிருக்கும்? என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு முதலீடு செய்வதுதான். உங்கள் முதலீட்டை திட்டமிட்டு, திட்டமிட்டபடி முதலீடு செய்யுங்கள். முதலீடு எவ்வளவு? அதை எப்படியெல்லாம் பிரித்து முதலீடு செய்யலாம் என்பதை உறுதி செய்து கொண்டு பங்குச்சந்தையில் கால் பதியுங்கள். வாங்கும் பங்குகளை எவ்வளவு லாபம் வந்தால் விற்கலாம் என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள். திட்டமிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
பங்குச்சந்தை முதலீடு ரிஸ்க் நிறைந்தது என்பது உங்களுக்கு தெரியும். இந்த ரிஸ்க்கை குறைக்க எப்போது ஒரு பங்கினால் நமக்கு நஷ்டம் வருகிறதோ, அப்போதே அதை கைகழுவிவிட வேண்டும். விலை குறையும் பங்கு கீழ்நோக்கி வரும் கத்திமாதிரி. அதை பிடிக்க நினைத்தால் நம் கை ரத்தக்களறி ஆகிவிடும். அதேபோல் நாம் வாங்கிய பங்கின் விலை லாபத்தில் இருக்கிறது என்றால் நேரம் பார்த்து அந்த பங்கை விற்று விடவேண்டும். உச்சத்தில் இருக்கும் பங்கு விலை மீண்டும் குறையும். குறிப்பிட்ட அளவு குறைந்தபிறகு மீண்டும் உயரும். இதுவே பங்குச்சந்தையின் நீண்டகால விளை யாட்டு. இந்த விளையாட்டை பற்றி நாம் தெரிந்து கொண்டு, அதுபற்றிய அறிவுடை யவர்களின் நட்பை பெற்று முதலீடு செய்தால் லாபத்தை ஈட்டலாம்; நஷ்டத்தையும் தவிர்க்கலாம். எனவே, இந்த வழிகளை மனதில் வைத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் ஜெயிப்பது உறுதி.