தொழில் என்பது 2 பிரிவுகளை கொண்டு உள்ளது. உற்பத்தி அல்லது தயாரிப்பு அடிப்படையிலானது. விற்பனை அல்லது தேவை அடிப்படையிலானது. உதாரணமாக ஸ்டீல் தகடு உற்பத்தி செய்யப்பட்டு அவை பாத்திரங்கள், பொருட்களாக தயாரிக்கப்படுகிறது. அந்த பாத்திரங்களை வாங்கி ஒருவர் விற்பனை செய்கிறார். பாத்திரங்களின் பளபளப்பு குறைந்தால் அதனை ஒருவர் பாலீஷ் செய்து தருகிறார். இவைகளில் உற்பத்தி, தயாரிப்பு, விற்பனை, சேவை என 4 அடிப்படைகள் உள்ளதை புரிந்து கொள்ளலாம். இவற்றில் சேவை என்பது கட்டணம் பெற்று செய்து கொடுக்கும் தொழில்களை குறிப்பிடுவது ஆகும்.
தயாரிப்பு தொழிலை மேற்கொள்வோர் அதற்கு உரிய விற்பனை வாய்ப்பை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக வியாபார போட்டி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாக இருக்க வேண்டும். அல்லது நாம் வசிக்கும் பகுதியில் மலிவாகவும், நிறைவாகவும் கிடைப்பதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பொருட்களின் விற்பனை வாய்ப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்து இருக்க வேண்டும். சிறிய முதலீட்டில் பெரிய அளவிலான தயாரிப்பு தொழில்கள் எதையும் மேற்கொள்ள இயலாது. எனவே, பட்ஜெட்டுக்குள் அடங்கும்படியான சிறிய அளவிலான தயாரிப்பு தொழிலையே மேற்கொள்ளலாம். நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் காலத்தில் ஏற்படும் சூழலை சந்திக்க சிறிது பொருளாதாரம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
மேலும் உங்களது தயாரிப்பு பொருளை சந்தையில் விற்பதற்கும், மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கும் அவ்வப்போது விளம்பரங்கள் செய்ய வேண்டும். இவற்றுக்கான மூலதனங்களை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே தயாரிப்பு தொழிலை செய்ய விரும்புபவர்கள் ஓரளவு பொருளாதாரம் உடையவராக இருக்க வேண்டும். கடன் தொல்லை இல்லாமல், சுய முதலீடு இல்லாதவர்கள் விற்பனை தொழிலை தேர்ந்து எடுக்கலாம். அதுதான் சிறந்தது. முக்கியமான விஷயம், தொழில் தொடங்க கடன் கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் முழு கடன் தொகையையும் வாங்க நினைக்கக்கூடாது. நம் தொழிலுக்கு தேவையான நிதி எவ்வளவோ அந்த அளவுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும். இல்லையேல் கடன் நம்மை அமுக்கிவிடும். இதை தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.