நாம் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை என சேர்ந்து போய் விட கூடாது. நம்மால் அவர்களை போல முன்னேற முடியுமா அந்த அளவிற்கு பொருளாதாரம் இல்லை என துவண்டு போய் விட கூடாது. பணம் இல்லை என்பது மட்டும் வாழ்க்கையில் வறுமை இல்லை. திறமைகளே இல்லாமல் வாழ்வதும் வறுமை தான். உலகத்தில் கடினமானது தன்னைத்தான் அறிந்து கொள்வது தான். தன்னிடத்தில் உள்ள திறமைகள் என்ன? மேலும் என்னென்ன திறமைகளை நம்மால் பெற முடியும்? அவற்றை அடைய மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் என்ன? என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரிடம் உள்ள திறமையை பணத்தை பயன்படுத்தியோ, அதிகாரத்தை பயன்படுத்தியோ பெற முடியாது. திறமை என்பது வெள்ளம் போன்றது. குறிக்கோள், லட்சியம் என்ற கரை இருக்குமானால் அந்த தண்ணீர் விவசாயத்திற்கு, குடிநீருக்கு என்று பல வகையில் பயன்படும். கரைகள் இல்லை என்றால் ஊருக்குள் புகுந்து பல உயிர்களை, உடமைகளை அழித்து விடும். எனவே குறிக்கோள், இலக்கு இல்லாத திறமை செயல்வடிவம் பெறாது.
வாழ்க்கை எண்ணற்ற சவால்கள் நிறைந்தது. உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளையும், பின் விளைவுகளையும் எதிர்கொள்ள திறமை நிச்சயம் தேவை. எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் மன உறுதியை, நீங்கள் பெற்றுள்ள திறமைகள் தான் அளிக்கும். அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றி நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளின் வாயிலாக, பலருடைய வாழ்க்கையை காண்பதன் வாயிலாக நாம் பெறுவது தான் அனுபவ அறிவு. நாம் காண்கின்ற, கேட்கின்ற நிகழ்வுகள் செய்திகள் வாயிலாக தான் அறிவை பெறுகிறோம். தன்னம்பிக்கையின் வாயிலாக, கற்பனையின் வாயிலாக, பயிற்சிகளின் வாயிலாக, கல்வி ஞானத்தின் வாயிலாக, கேட்டு உணர்வதன் வாயிலாக எதையும் கற்று கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வத்தின் வாயிலாக திறமைகளை வளர்த்து கொள்ளலாம். தீப்பொறி போன்ற உங்கள் திறமைகள் தீப்பந்தங்களாக மாறட்டும். செயல்திறன் என்கின்ற தீ வானத்தை எட்டட்டும். தீப்பந்தத்தை கீழ்நோக்கி காண்பித்தாலும் தீ மேல் நோக்கி தான் எரியும். எனவே திறமை என்கின்ற தீப்பந்தத்தை உருவாக்குங்கள். செயல்திறன் என்கின்ற தீ வெற்றியை நோக்கியே எரியும். நாளைய குறிக்கோள் ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றால் போல் திட்டமிட்டு வாழ்ந்தால் வெற்றி சொந்தக்காரர்களாக எப்போதும் நாம் இருக்கலாம்.