சில பெண்களுக்கு கர்ப்பப்பையின் உட்சுவர் மெலிதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதன் உட்சுவர் வளர்ச்சி படிப்படியாக அதிகரித்து 10 மி.மீ. முதல் 12 மி.மீ. வரை வளர்வது கருவுறுதலுக்குச் சிறந்தது. ஸ்கேனில் ஹெட்ரோஜினியஸ் அல்லது டிரிபிள் லேயர் எனக் குறிப்பிடும் வளர்ச்சி கருவுறுவதற்கு வசதியாக அமையும். உளுந்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சத்து இருக்கிறது. இதனால்தான் தென் இந்தியாவில் மரபு உணவாக நமது முன்னோர் உளுந்தங்கஞ்சியை வைத்திருக்கிறார்கள். பெண்கள் பூப்பெய்தியவுடன் வழங்கப்படும் முதல் உணவு இது. மாதவிடாயின் முதல் 15 நாட்களுக்குக் காலை உணவாகத் தொடர்ச்சியாக உண்டுவருவது கர்ப்பப்பையை ஆரோக்கியமாக பலப்படுத்தும். ஆலம் விழுது பால் கசாயமும் குடிக்கலாம். அதாவது, ஆலம் விழுது 50 கிராம், 200 மி.லி. பால், 200 மி.லி. தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து, 100 மில்லியாக சுண்டும் வரை காய்ச்சி, பின் வடி கட்டி கொஞ்சம் கருப்பட்டி சேர்த்துத் தேநீராக அருந்தலாம். காலை, மாலை இருவேளையும். பழங்களில் அத்தி, மாதுளை, கருப்பு திராட்சை விதையுடன் சாப்பிடுவதும் மிக்க பலனை தரும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தாய்மை புனிதமானது. கர்ப்பப்பையின் உட்சுவர் சீராக வளர்வதற்கு ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டீரோன் ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வேண்டும்.