அதுநாள் வரை, மேக்கப் விஷயங்களில் ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு என ஒரு பிரத்யேக 'ஸ்டைல்'-ஐ கடைப்பிடித்திருக்கலாம். ஆனால் அது பெருநகர வாழ்க்கைக்கு பொருந்தாது. முடிந்தவரை, நகர சூழலுக்கு ஏற்ப சின்னச்சின்ன மேக்கப் மற்றும் உடை அலங்கார நுணுக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள். பணிச்சூழல், உடன் பணிபுரிபவர்களை பற்றி அறிந்த பிறகு, அலுவலகத்திற்கு அணிந்து செல்லக்கூடிய ஆடை, அலங்கார பொருட்களை வாங்கலாம்.
எல்லோருடைய கவனத்தையும் சட்டென ஈர்க்கும் நிறங்களிலான உடைகளையும், உதட்டு சாயங்களையும், அலங்கார பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. ஆடம்பரமான மேக்கப்பை தவிர்த்துவிடுங்கள். அதற்காக மேக்கப் இல்லாமலும், பணிக்கு செல்லாதீர்கள். அதேபோல, அணியும் உடைக்கு ஏற்ற காலணி அல்லது ஷூ தேர்வும் முக்கியம். சுடிதார், குர்த்தி, ஜீன்ஸ், லெக்கின்ஸ், பலாசோ, பிளேசர்ஸ்... இவை எல்லாம் ஐ.டி. கலாசாரத்தில் பொதுவானவை. அதனால் இத்தகைய உடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தலாம். பணியிடம் பழக்கமானதற்கு பிறகு, உங்களுக்கான 'ஸ்டைலை' மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு மேக்கப் விஷயங்களில் ஈடுபாடு இல்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் முகப்பொலிவை தக்க வைக்கும் சிறுசிறு விஷயங்களிலாவது ஆர்வம் செலுத்துங்கள். அதாவது, முகத்தை சுத்தமாக பராமரிப்பது; நக பூச்சு பூசவில்லை என்றாலும் நகங்களை சுத்தமாக பராமரிப்பது, முகம் கருக்காமல் இருக்க 'சன்ஸ்கிரீன்' போடுவது, யாரும் குறை சொல்லாதபடி தலை முடிகளை பராமரிப்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்களில் கவனமாக இருங்கள்.