தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், ஆன்லைன்-ஆப்லைன் பயிலரங்கம் மூலமாகவும் பெண்களுக்கு பங்குசந்தை கலையை கற்றுக் கொடுப்பவரிடம் பேசினோம். இந்த பயணம் எப்படி தொடங்கியது என்பது முதல், பங்கு சந்தையில் களமிறங்க ஆசைப்படும் பெண்களுக்கு வழிகாட்டுதல் வரை எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அவை இதோ...
* எப்படி தொடங்கியது இந்தப் பயணம்? எனக்கு பங்கு சந்தை, பங்கு வர்த்தகம் சார்ந்த அனுபவமும், படிப்பினையும் இருந்ததால், அதை மற்றவர்களுக்கு குறிப்பாக ஏழை எளிய குடும்ப பெண்களுக்கு கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டேன். சிறு முயற்சியாகத்தான், சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன். இன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை பங்கு சந்தை முதலீட்டாளர்களாக, அந்த துறை சார்ந்த பணியாளர்களாக மாற்றி இருக்கிறேன். * பங்கு சந்தை குடும்ப பெண்களுக்கு ஏற்றதா? மற்றவர்களைவிடவும், குடும்ப பெண்களுக்குத்தான் சிறப்பானது. காலை 9 மணிக்கு தொடங்கும் பங்கு சந்தை வர்த்தகம், மாலை 3.30 மணி வரை நடைபெறும். இந்த நேரம், ஒருசில குடும்ப தலைவிகளுக்கு பிசியான நேரமாக இருந்தாலும், ஒருசிலருக்கு ஓய்வு நேரமாகத்தான் இருக்கும். அந்த சமயத்தில், தையல் வேலை, ஆரி வேலைப்பாடுகள், யூ-டியூப் பொழுதுபோக்குகள் என நேரம் செலவாகும். இப்படி பொழுதுபோக்காக கழிக்கும் நேரத்தை, குடும்ப தலைவிகள் பங்கு சந்தை வர்த்தகம் மூலமாக பயனுள்ள வகையில் செலவிடலாம். கூடவே, குடும்ப பொருளாதாரத்தை முன்னேற்ற தங்களால் முடிந்த பங்களிப்பை பங்கு சந்தை வாயிலாக பெறலாம்.
* குடும்ப பெண்கள், பங்கு சந்தையில் இணைவது எப்படி? ரொம்ப சுலபம். குடும்ப பெண்கள் மட்டுமல்ல, எல்லோருக்கும் இது பொதுவானதுதான். டிமெட் கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும். பிரபல வங்கிகளே இந்தவகை கணக்குகளை வழங்குகின்றன. 15 நிமிடங்களில் டிமெட் கணக்கை தொடங்கிவிட முடியும். அதேபோல பங்குகளை வாங்கி, விற்க, நிர்வகிக்க நிறைய 'புரோக்கிங்' இணையதளங்களும் இயங்குகின்றன. அதில் ஒன்றில், உங்களுக்கு விருப்பமான துறையில், விருப்பமான நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலமாக, பங்கு சந்தையில் நீங்கள் இணைந்துவிடுவீர்கள். * சிக்கலான பங்குசந்தையை குடும்ப பெண்கள் சுலபமாக கற்றுக்கொள்ள முடியுமா?
முடியும். பங்கு சந்தையின் செயல்பாடுகள் எளிமையானதுதான். அதன் அடிப்படையை புரிந்து கொண்டால், எளிமையாக வர்த்தகம் செய்யலாம். டி.வி. சேனல்கள், யூ-டியூப் சேனல்கள், பேஸ்புக் ரீல்ஸ், ஆன்லைன் படிப்புகள், வாட்ஸ் ஆப் குரூப்கள், கருத்தரங்குகள்... இப்படி நிறைய தளங்களில், பங்கு சந்தை பற்றிய விளக்கங்கள் கிடைக்கின்றன. நிறைய தனியார் அமைப்புகளும், நிறுவனங்களும் அதுபற்றிய படிப்பினையை வழங்குகின்றன. என்.ஐ.எஸ்.எம். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் செக்யூரிட்டி மார்க்கெட்) கல்வி நிறுவனத்தில், ஷேர் மார்க்கெட் பற்றிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
* பயிற்சி வகுப்புகள் அவசியமா? உங்களது சேமிப்பை முதலீடு செய்ய இருக்கிறீர்கள். அதனால் நிச்சயம் பயிற்சி வகுப்புகளும், வல்லுநர்களின் வழிகாட்டுதலும் அவசியம். இல்லையேல், உங்களது சேமிப்பு கரைந்துவிடும். * பங்கு சந்தையில் இளம் பெண்களின் பங்களிப்பு இருக்கிறதா? நிறைய இளம் பெண்கள் பங்கு சந்தையில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவில் இளம் பெண்களின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கிறது. சமீபகாலமாக தென்னிந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு பங்கு சந்தை மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இருப்பினும் வெளிப்படையாக தெரிவதில்லை. யூ-டியூப்பை திறந்து பார்த்தால், அதில் நிறைய தமிழ் பேசும் பெண்கள் பங்கு சந்தை பற்றிய தகவல்களை விளக்கிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும். * பங்கு சந்தை, கல்லூரி மாணவிகளுக்கு பயன்படுமா? வணிகம் சார்ந்து படிக்கும் கல்லூரி மாணவிகளுக்கு பங்கு சந்தை சிறப்பான பயிற்சிக்களம். ஒரு பங்கு வாங்கினால், அந்த நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் நமக்கு வருடந்தோறும் அனுப்பி வைக்கப்படும். அதன்மூலம், பிரபல நிறுவனங்கள் பேலன்ஸ் ஷீட் எப்படி தயாரிக்கின்றன, நிதி மேலாண்மையை எப்படி கையாள்கின்றன... போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். * பங்குகளை வாங்குவது, விற்பது, நிர்வகிப்பது... இவையெல்லாம் குடும்ப பெண்களுக்கு சிக்கல் நிறைந்த வேலைகளா? இல்லவே இல்லை. பல இணையதளங்கள் இதுபோன்ற வேலைகளை மிக சுலபமாக்கி விட்டன. பெண்கள், குறிப்பிட்ட இணையதளத்தில் கணக்கு ஒன்று தொடங்கி, அதில் இருக்கும் 'வாங்க', 'விற்க' ஆகிய பட்டன்களை மட்டும் அழுத்தினாலே போதுமானது. மற்றபடி, சட்டரீதியான வேலைகளை, அந்தந்த இணையதளங்களே பார்த்துக் கொள்ளும். * பங்கு சந்தைக்குள் யாரெல்லாம் நுழையலாம்? கல்லூரி மாணவிகள் தொடங்கி, பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வயது மூத்த பெண்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற துறை இது. படிப்பை விட, அனுபவ அறிவு இருந்தால்போதும், பங்கு சந்தையில் யாராக இருப்பினும் நுழையலாம், நிர்வகிக்கலாம், லாபம் பெறலாம். * பங்கு நிறுவனங்களை எப்படி தேர்வு செய்வது? என்.எஸ்.இ. எனப்படும் இணையதளத்தை திறந்து பார்த்தால், 'நிப்டி 50' என தலைசிறந்த 50 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அந்தந்த நிறுவனங்களின் கடந்த கால லாப-நஷ்ட கணக்குகளை அடிப்படையாக கொண்டே அந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு பிடித்தமான துறை நிறுவனங்களை தேர்வு செய்து, முதலீடு செய்யலாம். அதுபோக, உலக நடப்புகள், உலக வர்த்தகம் போன்றவற்றையும் கவனித்து, அதற்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும். * துறை சார்ந்த அறிவு தேவையா? நிச்சயமாக. நடப்பு 'டிரெண்ட்' பற்றி தெரிந்திருக்க வேண்டும். அடுத்ததாக, ஒவ்வொரு காலகட்டத்தில் எந்த மாதிரியான துறைக்கு அதிக வரவேற்பு இருக்கும், அடுத்த 10 ஆண்டுகளில் எந்த துறை அபார வளர்ச்சி பெறும், எது வீழ்ச்சி பெறும் என்பது போன்ற பொது சிந்தனைகளும், உங்களது பங்கு மதிப்பினை உயர்த்தி தரும். * புதிதாக பங்கு சந்தைக்குள் நுழையும் பெண்கள் செய்யக்கூடாத ஒன்று எது? அவசரப்படக்கூடாது. ஒரு பங்கு வாங்குகிறோம் என்றால், அது சேமிப்பு என நினைத்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாள் கழித்து, அதன் மதிப்பு கூடியிருக்கும் வேளையில், அதை விற்று பணமாக்கிக் கொள்ள வேண்டும். இன்று முதலீடு செய்து, நாளை பல லட்சம் லாபம் பார்க்க வேண்டும் என்றால், அதே அளவிற்கு நஷ்டத்தை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும். * பங்கு சந்தை முதலீடு அபாயம் தரக்கூடியதா? ஆம்..! கவனமாக செயல்படாத வரை அது, அபாயம் தரக்கூடியதுதான். ஆனால் தகுந்த படிப்பினையோடு கையாளும்போது, அது சிறப்பான முதலீட்டு தளமாக மாறிவிடும். * பங்கு சந்தையில் ஈடுபடுவோரை பாதுகாக்கும் அரசு அமைப்புகள் உண்டா? இருக்கிறது. செக்யூரிட்டி அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா எனப்படும் 'செபி' பங்கு நிறுவனங்களுக்கும், பங்குகளை வாங்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. அது இவ்விரு பிரிவினருக்கும் பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது. கல்லூரி மாணவிகள் தொடங்கி, பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வயது மூத்த பெண்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற துறை இது. படிப்பை விட, அனுபவ அறிவு இருந்தால்போதும், பங்கு சந்தையில் யாராக இருப்பினும் நுழையலாம், நிர்வகிக்கலாம், லாபம் பெறலாம்.