பெண்களின் இயல்பான பேச்சும், அணுகுமுறையும் அவர்கள் இறங்கும் காரியங்களில் வெற்றியை தருகிறது. அதற்கு மிகுந்த பொறுமையும், பயிற்சியும் தேவை. இன்று பல நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் பெண்களுக்கு பேச்சு பயிற்சி அளிக்கின்றன. காரணம், ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது அதன் வாடிக்கையாளர்கள் கையில் தான் உள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பது என்பது அத்தனை சுலபம் அல்ல. யாருடைய மனநிலை எந்த நேரத்தில் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கு தகுந்தபடி அவர்களை கையாளுவதில்தான் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் பணிக்கு பெண்களைதான் நியமிக்கின்றன. அதற்கு காரணம் அவர்களிடம் வெளிப்படும் மென்மையான, வசீகரமான பேச்சுகள் தான். இயல்பாகவே பெண்கள் பொறுமைசாலிகள். இருப்பினும் சுற்றுச்சூழலும், வேலைப்பளுவும் அவர்களின் பொறுமையை சோதித்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெர்சனாலிட்டி டெவலப்மென்ட், பப்ளிக் ரிலேஷன் போன்ற பயிற்சிகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்குகின்றன. அங்கு கிடைக்கும் பயிற்சிகள் அவர்களை வசீகரம் நிறைந்த புதிய பெண்களாக மாற்றுகிறது. அது அவர்கள் தங்கள் பணிகளில் மென் மேலும் உயர வழி வகுக்கிறது. அழகால் சாதிக்க முடியாததை அன்பால் சாதிக்க முடிகிறது. போர்க்கள சூழலை ஒரு புன்னகை மாற்றும் என்பது உண்மை. முக அழகிற்கு பல அழகு சாதனங்கள் உள்ளன. அழகான பேச்சுக்காக எந்த சாதனமும் இல்லை. ஆனால் நம்மை நாமே அழகு படுத்திக் கொள்ள இந்த பேச்சு ஒரு சாதனமாக அமைகிறது. இது அனைவருக்கும் கடவுள் கொடுத்த வரம். இதனை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பதற்றமான நேரத்தில் தேவையற்ற பேச்சுகளை பேசக்கூடாது. அந்த சூழலில் பெண்கள் தன்மையாகவும், நம்பிக்கையாகவும் பேசி பதற்ற சூழலைப்போக்கி, அங்குள்ள சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக ஆக்கவேண்டும். அதில்தான் பேச்சுக்கலையின் வெற்றி அடங்கியிருக்கிறது. பெண்களின் தன்மையான பேச்சுக்கு ஒரு சக்தியிருக்கிறது. அது அனைவரையும் உங்கள் வசப்படுத்தும். மேலும் அவ்வாறு கனிவாக பேசுவது நற்குணமும், சிறந்த பண்பும் ஆகும். நம்முடைய வார்த்தை பலரால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இத்தகைய வசீகர பேச்சை கையாளலாம். கண்டிப்பில் திருத்த முடியாத குழந்தைகளைக் கூட தன்மையான பேச்சால் திருத்தி விடலாம். அப்போது பெண் களுக்கு வசப்படும் கனிவும், பணிவும் காலப்போக்கில் அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும். நல்ல வார்த்தைகள் பெண்களை அழகாக மற்றவர்களுக்கு காட்டும். உங்களுடைய புறத்தோற்ற அழகு சாதிக்காத ஒன்றை தன்மையான வார்த்தைகள் சாதிக்கும். எதிரியை நண்பனாக்குவதும், நண்பனை எதிரியாக்குவதும் வார்த்தைகள்தான். பெண்கள் அன்றாடம் வாழ்க்கையில் பலரை சந்திப்பார்கள். தங்களைவிட உயர்ந்தவர்களை, பொறுப்பான பதவிகள் வகிப்பவர்களை, பிரபலமானவர்களை ஆழ்ந்து கவனிக்கவேண்டும். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகள் நிறைய இருக்கும். அந்த பண்புகளை கற்றுக்கொண்டு, நன்றாக உள்வாங்கிக்கொண்டு, உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். நீங்கள் அழகாக இல்லாவிட்டாலும் அத்தகைய பண்புகள் உங்களை வசீகரமானவராக்கிவிடும்.