பொதுவாக, கருத்தடை வழிமுறைகள், தற்காலிக முறைகள், நீண்டகால முறைகள், நிரந்தர முறைகள் என மூன்றுவகைப்படும். தற்காலிக முறைகளில் காண்டம் எனப்படும் உறை, கருத்தடை மாத்திரை, அவசரநிலை மாத்திரை, கருத்தடை பேட்ச், கருத்தடை வளைவுகள், ஸ்பெர்மசைட், டயாப்ரம், கேப், கருத்தடை ஊசி ஆகியவை அடங்கும். நீண்டகால முறைகளில் காப்பர் டி, கான்ட்ராசெப்டிவ் இம்பிளான்ட் ஆகியவையும் நிரந்தர முறையில் டியூப்பக்டமி, வாசக்டமி ஆகியவையும் அடங்கும். இதில் ஆணுறையும், வாசக்டமியும் ஆண்களுக்கானவை மற்றவை பெண்களுக்கானவை
காப்பர் டி(Copper T) ஒரு நீண்டகால கருத்தடை சாதனம். மாதவிலக்கின் இறுதி நாளில், பெண்களின் பிறப்புறுப்பின் வழியாக மருத்துவரால் உள்ளே பொருத்தப் படும் கருத்தடை சாதனம் இது. இது பல்வேறு அளவுகளில் வருகிறது. அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை ஆயுள்கொண்டது. ஹார்மோன்கள் கொண்ட காப்பர் டி, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கி, விந்துக்கள் எண்டோமெட்ரியத்தை அடைவதைத் தவிர்க்கும், ஹார்மோன்கள் இல்லாத காப்பர் டி, காப்பர் அணுக்களைச் செலுத்தி விந்துக்களின் இயக்கத்தைத் தடுக்கும். மேலும், இதை, விரும்பும்போது அகற்றி, கருத்தரிக்கலாம். காப்பர் டி தோல்வி அடைய 1 சதவிகித வாய்ப்பு மட்டுமே உண்டு. ஆனால், இது சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட்கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட் எனப்படும் சிறிய குச்சி போன்ற கருத்தடை சாதனம், மருத்துவரால் பெண்களின் கைப்பகுதியில் செலுத்தப்படும். இது சினைமுட்டை வெளியேற்றத்தைத் தடுக்கும். மேலும், பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பின் அடர்த்தியை அதிகரித்து, விந்து உட்செல்வதையும் தடுக்கும் என்பதால் மிகவும் பாதுகாப்பான கருத்தடை சாதனம் இது. ஒருமுறை உட்செலுத்திக்கொண்டால், மூன்று வருடங்கள் முதல் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் வரை கருத்தடை செய்யும். விரும்பினால் இதை அகற்றிக்கொண்டு கருத்தரிக்கலாம். ஒரு சதவிகிதம் மட்டுமே தோல்வி அடைய வாய்ப்பு உள்ள இம்ப்ளான்ட் சாதனம் இது. சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.