பணம்தான் வாழ்வின் பிரதானம் என்ற எண்ணம் நிறைய பேரிடம் இருக்கிறது. பணக்காரராவதற்காக ஓடி ஓடி உழைத்தாலும் ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக முடியாது. பணத்தை துரத்தி செல்வது வாழ்க்கையின் பெரும் பகுதியை இழக்க நேரிடும். நெருங்கிய நண்பர்கள், குடும்பம், நிம்மதி என பல விஷயங்களை தியாகம் செய்ய நேரிடும். உங்கள் மனதுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யுங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சிந்திப்பதை நிறுத்துங்கள். அவர்கள் எப்படி நம்மை மதிப்பிடுவார்கள் என்று கவலைப்படுவதையும் நிறுத்துங்கள். உங்களை நீங்களே மதிப்பீடு செய்து நிறை, குறைகளை சரிபடுத்துங்கள்.
எளிதில் உணர்ச்சிவசப்படுவதை நிறுத்துங்கள். அது எதிர்மறை சிந்தனை கொண்ட நபராக உங்களை மாற்றிவிடும். பாதுகாப்பற்ற சூழலில் வாழும் உணர்வையும் ஏற் படுத்திவிடும். மகிழ்ச்சியை உணரவே மனம் தடுமாறும். கடந்த காலத்தை பற்றி சிந்திப்பதை நிறுத்துங்கள். ஏனெனில் பெரும்பாலானோர் கடந்த காலங்களில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளை அசைபோடுவதில்லை. மனதை வருத்திய விஷயங்களையே நினைத்துப் பார்க்கிறார்கள். அவை தூக்கமில்லாத இரவுகளையும், மன வலிகளையும் மட்டுமே வழங்கும். எது நடந்தாலும் அதனை தைரியமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருக்க வேண்டும். ஏதேனும் தவறு செய்துவிட்டால் அது பற்றியே சிந்தித்து மனதை காயப் படுத்த வேண்டியதில்லை. அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை பற்றிதான் சிந்திக்க வேண்டும். செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். இனி அதுபோல் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் நலனில் அக்கறை கொண்டிருப் பவர்களுடன் மட்டுமே முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நயவஞ்சக எண்ணம் கொண்டிருப்பவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். அவர்களுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளாமல் இருந்தாலே மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டீர்கள். காதல் தோல்வியை எதிர்கொண்டிருந்தால் மீண்டும் அந்த தருணத்தை ஒருபோதும் நினைத்துப் பார்க்காதீர்கள். ஏனென்றால் அது வெறுப்புணர்வைத்தான் ஏற்படுத்தும்.அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. நீங்கள் பார்க்கும் வேலை உங்களுக்கு மன நிறைவை கொடுக்கவில்லை என்றாலோ, வேலை மீது வெறுப்பு கொண்டாலோ அதிலிருந்து விலகி விடுங்கள். கை நிறைய சம்பளம் கொடுத்தாலும் மகிழ்ச்சியை தரவில்லை என்றால் அந்த வேலையை தொடர்வது அர்த்தமற்றது. மது, போதைப்பொருள், ஆரோக்கியமற்ற உணவு உள்பட வேறு ஏதேனும் கெட்ட பழக்கவழக்கத்தை கொண்டிருந்தாலும் அதிலிருந்து விடுபடுங்கள். அதன் பிறகு வாழ்க்கையை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள் என்பது புரியும்.