No results found

    தாழ்வு மனப்பான்மையை ஒழிப்பதே வெற்றிக்கு வழி...


    பேதம் என்ற தமிழ் சொல்லுக்கு வேற்றுமை என்பது பொருளாகும். உண்மையில் இதற்கான பொருளை நாம் தேடவே தேவையில்லை. அன்றாட வாழ்க்கையில் காலம் காலமாக நம் நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் சூழலே இதற்கான விளக்கத்தை அளிக்கிறது. நிறைய பேர் சாதியினாலோ, மதத்தினாலோ ஏற்பட்டிருப்பது தான் பேதம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக சாதியும், மதமுமே நமது நாட்டில் உள்ள மிகப்பெரிய பேதமாகும். ஆனால், அதையும் தாண்டி நிறைய பேதங்கள் உள்ளன. ஆண், பெண் என்ற பேதம், முதலாளி, தொழிலாளி என்ற பேதம், பணக்காரன், ஏழை என்ற பேதம், படித்தவன், படிக்காதவன் என்ற பேதம், மொழிகளுக்குள் பேதம், மண்ணுக்குள் பேதம் என்று கூறிக்கொண்டே போகலாம். வித்தியாசம் என்று பொருள் கொண்ட பேதமானது, நம் மக்களால் ஒருவித வெறுப்பு தன்மையை ஏற்படுத்துகிறது. காலம் காலமாக எந்த ஒரு பேதமாக இருந்தாலும், அதை ஒழிக்க வேண்டும், அதை உருவாக்கிக்கொண்டிருப்பவர்களின் கருத்தை மாற்றி அவர்களை திருத்த வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறோம். இது மிகவும் சரியான கருத்து என்று வைத்துக்கொள்வோம். இம்மாதிரியான முற்போக்கு கருத்துக்களை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறிவிட முடியாது. இன்று ஒரு கூட்டம் திருந்துகிறது என்றால் நாளை வேறு ஒரு கூட்டம் உருவாகும். சாதியை ஒழிப்போம், மதத்தை ஒழிப்போம், முதலாளித்துவத்தை ஒழிப்போம் என்று போராடிக்கொண்டும், கூப்பாடு போட்டுக்கொண்டும் இன்னும் எத்தனை நாளைக்கு செய்து கொண்டிருக்கப்போகிறோம்.

    இவை அனைத்தும் மற்றவர்களை திருத்தும் செயல் என்று பார்த்தால், பேதத்திற்கு உள்ளாகும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்னைவிட நீ தாழ்ந்தவன் என்று ஒருவன் கூறினால், உடனே மனம் நொந்து தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாதலை நிறுத்த வேண்டும். பார்க்கும் வேலையில் என்னை விட நீ தாழ்ந்தவன் என்றாலும், இனத்தில் நீ என்னைவிட தாழ்ந்தவன் என்றாலும், பணத்தில் நீ என்னை விட தாழ்ந்தவன் என்றாலும், செருக்கோடு எண்ணுங்கள், “நீ யார் என்னை தாழ்ந்தவன் என்று கூறுவதற்கு?” என்று. அவர்கள் உயர்ந்தவர்கள், நாங்கள் தாழ்ந்தவர்கள். அதனால் நாங்கள் போராடுகிறோம் என்று கூறி பல வருடங்களாக பேதத்தில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறோம். உயர்ந்தவர்கள் என்று கூறுவதில் தான் பெருமை, கவுரவம் என்று மார்தட்டிக் கொண்டிருப்பவர்களை ஒரு பொருட்டாகவே எண்ணக்கூடாது.

    தான் இருக்கும் இடமும், பார்க்கும் வேலையும், பேசும் மொழியும், முன்னோர்கள் வழி வந்த பரம்பரையும் மிகச் சிறந்தது என்று ஒவ்வொருவரும் மனதில் நினைக்கத் தொடங்கவேண்டும். அதை விடுத்து கொஞ்சமும் தேவையற்ற பேதத்தினால் உருவான தாழ்வு மனப்பான்மையை மனதிற்குள் வளர்க்கக்கூடாது. இதற்கான எடுத்துக்காட்டாக மேலை நாட்டு மக்களை நாம் எடுத்துக்கொள்ளலாம். அங்கே மத பேதமும், தொழில் பேதமும், இதர பேதங்களும் இல்லை என்று கூறவில்லை. அங்கேயும் இதுபோன்ற வேற்றுமை உணர்வுகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அங்கு வாழும் மக்கள் அதை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை நாம் பார்க்கவேண்டும். அங்கு முதலாளியானாலும், தொழிலாளியானாலும், ஆணானாலும், பெண்ணானாலும், யாராக இருந்தாலும் சக மனிதர்கள்தான். ஒருவரை விட ஒருவர் பெரியவர் இல்லை என்ற எண்ணம் பெரும்பான்மையான மக்களிடத்தில் காணப்படும்.

    ஆக, என்று நாம் நம்மை தாழ்வாக நினைக்கத்தொடங்கினால் அந்த எண்ணமானது நம் குடும்பத்திற்கும், வருங்கால சந்ததியினருக்கும் தொடர்ந்து கொண்டே போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வேற்றுமை உணர்வினால் தன்னை இழிவுபடுத்துபவர்களுக்காக முக்கியத்துவம் அளிக்காமல், அவர்கள் முன்பு வாழ்க்கையில் முன்னேறி வாழ்ந்து காட்டுதலே பெருமை சேர்க்கும் செயலாகும். முன்னேறுவதற்கான பாதையை உருவாக்க வேண்டுமே தவிர, ஏற்கனவே முட்கள் நிறைந்து காணப்படும் சகதியான பாதைக்கு, தான் போவது மட்டுமில்லாமல் உடன் இருப்பவர்களையும் சேர்த்துக்கொண்டு வீணாதலை நிறுத்த வேண்டும். நான் முட்களை நீக்கி அந்த பாதையில் பூக்களை நிரப்புவேன் என்று போர்க்கொடி தூக்கிக்கொண்டு இருந்தால், தன்னுடைய நேரமும், உழைப்பும் வீணாகுமே தவிர முன்னேற்றத்தை பார்ப்பது மிகவும் கடினமானது.

    உனக்கான தனித்துவ பாதையை உருவாக்கி உன்னைச் சேர்ந்த மக்களிடத்தில் நீ கொடுத்தாயானால், அந்த நல்வழியை பின்பற்றி ஒரு பெரும் அமைதியான சமூகமே உருவாதலை கட்டாயம் பார்க்க முடியும். நான் பெரியவன் என்று ஒருவன் கூறினால், நான் உனக்கு எந்த விதத்திலும் சிறியவன் இல்லை என்பதை வாயால் கூறுவதை காட்டிலும், செயலால் காட்டுவதே தனக்குத்தானே உற்சாகமூட்டும் வழியாகும். வேற்றுமையை உடைத்து முன்னேறி வாழ்ந்து காட்டும் கதையம்சமுள்ள திரைப்படங்களைப் பார்த்து விசில் அடித்து கொண்டாடி மகிழும் மக்களால், தங்களுடைய வாழ்வில் அதுபோன்று வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏனோ எழுவதில்லை. தான் முன்னேறுவதை வேறு ஒருவன் எவ்வித பேதத்தினாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. இக்காலகட்டத்தில் முன்பைவிட சூழலும், வாய்ப்புகளும் நிறைய உள்ளன. அதை நல்ல முறையில் பயன்படுத்தி தனக்கென தனியான ஒரு அடையாளத்தை அனைவரும் மேற்கொள்ள தொடங்க வேண்டும். கூட்டத்தினரோடு இருக்கும்பொழுது எவருக்கும், நீ தாழ்ந்தவன் என்று பிறர் சொல்லும் சொல்லைக் கேட்டு தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதில்லை. ஏனென்றால் என்னைப் போன்று இங்கு ஒரு பெரிய கூட்டமே உள்ளது. நான் தனி ஆள் அல்ல என்ற எண்ணமும், பலமும் தானாக உருவாகிறது. ஆனால் இதே சூழ்நிலை தனிப்பட்ட முறையில் நிகழும் பொழுது பலவீனமாகி மனம் நொந்து துவண்டு போகும் நிலை ஏற்படுகிறது. அங்கு தான் நிலை தடுமாறாமல், சூழ்நிலைகளால் இழுக்கப்பட்டு தைரியம் இழக்காமல் திமிரோடு நிற்கவேண்டும். முன்னேற்றம் ஒன்றே நான் பெரியவன் என்று காட்டும் என்ற வைராக்கியத்தை மனதில் கொள்ள வேண்டும். இதையே வேதமாக ஏற்று பின்பற்ற தொடங்க வேண்டும். எந்த இடத்தில் கூனிக்குறுகி மனம் புண்பட்டதோ, அதே இடத்தில் தலைநிமிர்ந்து என்னுடைய நிலை இதுதான் என்று மிடுக்கோடு கூற வேண்டும். பிறருடைய பேதச் செருக்கை அடக்க வேண்டும் என்ற எண்ணத்தை காட்டிலும், தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை அறவே ஒழித்து சமூகத்தில் நிற்பதே மாபெரும் வெற்றியாக கருதப்படும். பேதம் தீக்குச்சி என்றால், உரசியவுடன் பற்றிக்கொள்ளும் காய்ந்த சருகல்ல நாம். முளைத்து, துளிர்த்து, செழித்து, வளர்ந்து, மரமாகும் விதை நாம். வளர்வோம். நிமிர்வோம்.

    Previous Next

    نموذج الاتصال