உதாரணமாக டி.வி., செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது நீக்கும் மையத்தை ஒருவர் ஆரம்பிக்க விரும்புகிறார் என்றால், முதலில் அவர் டி.வி. பழுது நீக்கும் பயிற்சி பெற வேண்டும். இதற்கான சிறந்த பயிற்சி மையங்களை தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். பயிற்சிக்கு பிறகு சான்றிதழ் கிடைக்கும். இந்த சான்றிதழ் வங்கிக்கடன் பெறுவதற்கு உதவியாக இருக்கும். பயிற்சி முடிந்த பிறகு சொந்தமாக பழுதுநீக்கும் மையம் வைக்கும் போது அதற்குரிய சரியான இடத்தை தேர்ந்தெடுப்பது மிக மிக அவசியம். கடைகள் அதிகம் உள்ள, மக்கள் நடமாட்டம் மிகுந்த மெயின் ரோட்டில் இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் நாம் இருக்கும் இடத்தை மக்களுக்கு தெரிவிக்க எளிமையான வழியை தேர்ந்தெடுக்கலாம். அதாவது துண்டு பிரசுரம் அச்சடித்து விளம்பரம் செய்து வாடிக்கையாளரை பிடிக்கலாம். அவ்வாறு பிடித்த வாடிக்கையாளர்களை தக்க வைக்க சிறந்த சேவை வழங்குவது மிகவும் முக்கியமாகும். மையம் தொடங்கிய உடனே வாடிக்கையாளர்கள் வந்து வருமானம் அதிகமாக இருக்கும் என கற்பனை செய்யக்கூடாது. அதற்காக மனம் தளரக்கூடாது. ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் எப்போதும் தளர விடக்கூடாது. முயன்றால் இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்!
சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை தற்போது பலருக்கு உள்ளது. ஆனால் அதற்கான வழிமுறைகள் என்ன என்பது பலருக்கு தெரிவதில்லை. நன்றாக யோசித்து எந்த தொழிலை தொடங்குவது என முதலில் திட்டமிட வேண்டும். தொடங்கிய பிறகு எவ்வித குழப்பமும் இருக்கக்கூடாது. பிறகு இதற்கான மார்க்கெட் நிலவரம் என்ன?, இதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?, லாபம் எவ்வளவு கிடைக்கும் என்பதை கணக்கிட வேண்டும். பொதுவாக நமக்கு நன்கு தெரிந்த தொழிலை தேர்ந்தெடுப்பதுதான் நல்லது. எந்த தொழிலில் ஆர்வம் இருக்கிறதோ அதில் சிறப்பான பயிற்சி பெற்று அதன்பிறகு தொழில் தொடங்கினால் சாதிக்கலாம்.