உண்மையில் கவலையை களைவதற்குப் பதிலாக அதை சேர்த்துக் கொள்வதால்தான் மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்) உருவாகிறது. இது தொடர்ந்து நிகழ்வது நமது வாழ்க்கைச் சூழலையே மாற்றுகிறது. உடலிலும், உள்ளத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி விபரீத வியாதிகளில் தள்ளுகிறது. நீங்கள் நினைத்தால் மனஅழுத்தத்தை எளிதாக விரட்ட முடியும். ஏனெனில் மனஅழுத்தம் என்பது உடல் சார்ந்ததல்ல. மனம் சம்பந்தப்பட்டதுதான். தற்போது ஆண், பெண் எல்லோருமே லட்சியத்தின் பின்னால் ஓடுகிறார்கள். அந்த லட்சியங்கள் எளிதில் அடைய முடியாததாகவும், போட்டி நிறைந்ததாகவும் இருக்கிறது. இதனால் தோல்விகள், பின்தங்குதல் போன்றவை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இது கவலை, ஏக்கம், மனக்கசப்பு போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி மனஅழுத்தத்திற்கு வழி வகுக்கிறது.
‘மனஅழுத்தம் என்பது மனிதனுக்கு ஆற்றலை வழங்கும் உயர்ந்த சக்தி’ என்று ஓசோ குறிப்பிடுகிறார். ‘மன அழுத்தம் வரும்வேளைகளில் உடல் மற்றும் மனதை தளர்வுறச் செய்யும் வேலையில் இறங்காதீர்கள். மாறாக அதை பயனுள்ள ஆற்றலாக மாற்றும் வேலையில் இறங்குங்கள்’ என்று அவர் கூறுகிறார். மனஅழுத்தத்தை எப்படிப் பயனுள்ளதாக மாற்றுவது என்கிறீர்களா? இதற்கு வேறு எங்கும் சென்று பயிற்சி பெற வேண்டிய அவசியம் இல்லை. அதைப்பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே நீங்களும் அதைச் செய்துவிட முடியும். நீங்கள் மனஅழுத்தத்தால் தூக்கமின்றி தவிக்கிறீர்களா? அதற்காக கவலைகொள்ள வேண்டாம். சிறிது தூரம் நடந்தாலே மனஅழுத்தம் மாறத் தொடங்கிவிடும். சிறிது தூரம் ‘ஜாகிங்’ செல்வது, நீண்டதூரம் நடப்பது, மாடிப்படிகளில் சில முறை ஏறி இறங்குவது போன்ற ஏதாவது ஒன்றை செய்யுங்கள்.
உங்களுக்கு பிடித்த பாடல்களைக் கேட்டு ரசியுங்கள். முடிந்தால், உங்களுக்கு எப்படி முடியுமோ அப்படி அந்த பாடலுக்கு ஆடுங்கள். அப்போது உங்கள் மனது மற்றவர்களுக்கு தொந்தரவு தராத விதத்தில் எதை செய்யச்சொல்கிறதோ அதை செய்யுங்கள். தூங்கச் செல்லலாம் என்று தோன்றினால் தூங்குங்கள், நிம்மதியாக உறக்கம் வரும். மனம் எப்போதுமே பிரச்சினைகளுடன் போராடிக் கொண்டேதான் இருக்கும். நீங்கள் மாற்றுச்செயலில் இறங்கும்போது மனமும் கவலையை மறந்து வேறு திசைக்குத் திரும்பி விடும். உடலில் எங்காவது வலியை உணர்ந்தால் வெளிச்சம் குறைந்த, சவுகரியமான அறையில் உங்களுக்கு பிடித்தமான இருக்கையில் அமருங்கள். எந்தப் பகுதியில் வலி தெரிகிறதோ அந்த பகுதியை கையால் தொடுங்கள். ‘பிளீஸ் ரிலாக்ஸ்’, ‘போய்விடு வலியே... போய்விடு...’ என்று சொல்லியவாறு மிதமாக வருடுங்கள். 5 நிமிடங்கள் இப்படிச் செய்யுங்கள். நல்ல மாற்றத்தை உங்களால் உணரமுடியும். மன அழுத்தம் எப்போதும் உங்களை தேடி வரத்தான் செய்யும். அது மனதிற்குள் சிம்மா சனம்போட்டு அமர்ந்துவிட வாய்ப்பு கொடுக்காமல், அப்படியே கையை குலுக்கி அதனை வழியனுப்பிவைத்துவிடுங்கள்.