நுரையீரல் பாதிப்பு: ஷேப்வேர், வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை சுருக்குவதன் மூலம் ஏற்படும் அழுத்தம் நுரையீரலை சென்றடைகிறது. இதனால் நுரையீரல் செயல்பாடு பாதிப்படைந்து மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். நுரையீரலின் இயக்கம் குறைந்தால் சுவாசப் பிரச்சினை உருவாகும். ரத்த ஓட்டம்: இறுக்கமான ஷேப்வேர் சில சமயங்களில் சருமத்திலும், தசைகளிலும் மிகுந்த அழுத்தத்தைக் கொடுக்கிறது. இவ்வாறு அழுத்தம் ஏற்பட்ட இடங்களில் அதிக ரத்த ஓட்டம் தேவைப்படும். அதனால், இதயம் அதிகமான ரத்தத்தை அந்த இடத்திற்கு விரைவாகச் செலுத்தும். தொடர்ச்சியான மற்றும் வழக்கமான ரத்த ஓட்டம் மாறி, ரத்தத்தில் தேவையற்ற ரத்தக் கட்டிகள் உருவாகுவதற்கு இது காரணமாக அமைகிறது.
சிறுநீரகப் பிரச்சினை: ஷேப்வேர் அணியும் பெண்கள் அசவுகரியம் காரணமாக கழிவறைகளை பயன்படுத்தாமலேயே இருப்பார்கள். இதனால், அவர்களுக்கு சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகலாம். இது சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரித்து, பாதிப்பை ஏற்படுத்தும். கால்களில் உணர்வின்மை: ஷேப்வேர் தொடைகளில் அணியும்போது ஏற்படும் சுருக்கத்தின் அழுத்தம் தசைகளை இறுக்கி நரம்புகளை அழுத்துகிறது. இதனால் கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. கால்களில் உணர்வின்மை, கூச்சம், தசைப் பிடிப்புகள் முதலியவை உருவாகின்றன. மேலும் இது கால்களில் வீக்கத்தை அதிகரிக்கவும் செய்கிறது.
செரிமானக் கோளாறு: ஷேப்வேர் உடலின் நடுப்பகுதியில் உள்ள தசைகளை மட்டுமில்லாமல், உள் உறுப்புகள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. அந்த அழுத்தம் காரணமாக வயிற்றுப் பகுதியில் உள்ள பெருங்குடல் வழியாக உணவு செல்லும் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. 'இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோய்' ஷேப்வேர் பயன்படுத்துபவர்கள் அனுபவிக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். தசைகள் வலுவிழக்கிறது: ஷேப்வேர் அணியும்போது ஏற்படும் அழுத்தம், தசைகளை தளர்த்தி, அவற்றின் செயல்பாட்டை குறைத்து, பலவீனப்படுத்தி வலுவிழக்கச் செய்கிறது.