முடி வளர்ச்சி: இறுக்கமான உடை அணிவது முடி வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக முடிகள், வேர்க்கால்களில் இருந்து மேல் நோக்கித்தான் வளரும். ஆனால் இறுக்கமான உடை அணியும் போது சில முடிகள் நேராக வளராமல் பக்கவாட்டிலோ அல்லது சுருண்டோ சருமத்தில் படர்ந்து நோய்த்தொற்றை உண்டாக்கக்கூடும். அப்படி சரியாக வளராத முடிகளால் ஏற்படும் தொற்று காரணமாக கொப்புளங்கள் தோன்றும். அப்படியே அடர்த்தியாக சுருண்டு இருப்பதால் அந்த இடத்தில் வலியும் அதிகரிக்கும். கொப்புளங்களால் அவஸ்தைகளையும் அனுபவிக்கக்கூடும். படர் தாமரை: பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு உடல் சூடுதான் காரணமாக அமைந்திருக்கிறது. இறுக்கமான உடை அணியும்போது உடல் சூடு வெளியேற முடியாத சூழல் உண்டாகும். வியர்வையும் அப்படியே தங்கிவிடுவதால் அரிப்பு, சருமம் சிவப்பாதல் போன்ற பாதிப்புகள் நேரும். அவை படர் தாமரை பிரச்சினைக்கும் வழிவகுக்கும். படர் தாமரையால் ஏற்படும் அரிப்பு கடும் வேதனையை உண்டாக்கும். இது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பரவக்கூடும்.
சரும வறட்சி: லெக்கின்ஸை அதிக நேரம் அணியும்போது உடலில் உள்ள ஈரப்பதத்தை குறைத்து சருமத்தை வறட்சி அடைய வைத்துவிடும். தடிப்பு, புண்கள் ஏற்பட காரணமாகிவிடும். லெக்கின்ஸை கழற்றியதும் குளித்துவிடுவது நல்லது. பூஞ்சைகள்:இறுக்கமாக உடை அணியும்போது சிலருக்கு ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படக்கூடும். கால் பகுதிகளில் அதிக பாதிப்பு நேரும். இறுக்கமான ஆடைக்கும், உடலுக்கும் இடையே படியும் ஈரப்பதம் காரணமாக பாக்டீரியாக்கள், பூஞ்சை தொற்றுகள் ஏற்படக்கூடும். ஆதலால் தளர்வான உடைகளை அணிவதுதான் சருமத்திற்கும், உடலுக்கும் நல்லது.
ஈஸ்ட் தொற்று: பொதுவாக ஈஸ்ட், வெப்பமான இடத்தில் நன்கு வளர்ச்சி அடையும். லெக்கின்ஸ் போன்ற வெப்பமான உடை, அவை நன்கு வளர்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும். லெக்கின்ஸ் அணிய ஆசைப்பட்டால், சிறிது நேரம் உடுத்தலாம். நாள் முழுவதும் அணிவது சரியானதல்ல. அரிப்பு:இதுவும் பூஞ்சை தொற்றுகளால் உண்டாகிறது. லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான உடை அணிந்து உடற்பயிற்சி செய்யும்போது வியர்வை அதிகமாக வெளியேறும். அவை உடைக்குள் படிவதால் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உண்டாகும். ஒருவேளை லெக்கின்ஸ் அணிந்து உடற்பயிற்சி செய்தால் அந்த உடையை நீண்ட நேரம் அணியக்கூடாது. உடற்பயிற்சி செய்து முடித்ததும் உடையை மாற்றிவிட்டு கை, கால்களை நன்றாக கழுவிவிட வேண்டும். குளித்துவிடுவதும் நல்லது. பூஞ்சை தொற்று ஏற்படுவதை தவிர்க்க, கிரீம் உபயோகிக்கலாம்.
முகப்பரு: பெண்களின் சருமத்தை பாழ்படுத்துவதில் முகப்பருவுக்கு முக்கிய பங்கு உண்டு. இறுக்கமான உடை அணிவது கூட முகப்பரு பிரச்சினைக்கு அடிகோலிடும். ஏனென்றால் இறுக்கம் காரணமாக வியர்வைகள் வெளியேறுவதற்கு வழியில்லாமல் போய்விடும். அவை சருமத்தில் படியும்போது முகப்பரு பிரச்சினை உருவாகக்கூடும். வயிறு: யோகாசனத்தில் ஈடுபடும்போது இறுக்கமான பேண்ட் அணியும் வழக்கம் இருக்கிறது. அவற்றுள் ஒருசில யோகா பேண்ட்கள் மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடும். அது செரிமான அமைப்பை பாதிப்புக்குள்ளாக்கும். அதனால் வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத பேண்ட் அணிவதற்கு முயற்சிக்க வேண்டும். உடல் பருமன்: உடல் எடை அதிகரிப்புக்கும் லெக்கின்ஸ் காரணமாக அமைந்திருக்கிறது. தசைகள் இறுக்கம் அடைந்து உடல் தோற்றம் மாறுபடக்கூடும்.