No results found

    விதியை மதியால் வெல்வோம்


    விதி என்பது தீர்மானிக்கப்பட்டது. உயிர்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை என்னதான் நடக்கும் என்று இறைவன் தீர்மானிக்கிறான் என்ற நம்பிக்கையே விதி என்று சொல்லப்படுவது, நம்பப்படுவது என்றும் சொல்லலாம். ‘ஊழ்’ என்று இலக்கியம் கூறுகிறது ஈரடியில் எடுத்து கூறிய வள்ளுவப் பெருந்தகை தம் குறள்வழி வரிகளில் விதி பற்றிக் கூறியுள்ளார். “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும்” என்று ஒரு குறளில் கூறுவார். அவரே வேறொரு குறளில் ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ என்றும் கூறியிருப்பார். ‘ஊழ்’ என்றால் கடந்த பிறவியில் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப இந்த பிறவியில் அவனுக்கு பலாபலன்கள் கிடைக்கும் என்று பொருள். எங்க அப்பா, அம்மா செய்த புண்ணியம் நாங்க இன்று நல்லா இருக்கிறோம் என்று பேசிக்கொள்வதை கேட்டிருப்போம். ஊழை விட பெரிய வலிமையான சக்தி எதுவும் இவ்வுலகில் இல்லை என்பது ஒரு வாதம்; மனிதன் முயன்றால் ஊழையும் உப்பக்கம் காணலாம் அதாவது வென்று விடலாம் என்பது மறு வாதம்.

    ‘விதியை மதியால் வெல்வோம்’ என்ற வாதமும் முன்னேற்றச் சிந்தனையை தூண்டுவதாக முயற்சியை கொண்டு முன்னேறுவது அமைவதே விதிப்படி நடக்கட்டும் என்று சோம்பி இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணவே முடியாது. மதி என்பது என்னவென்றால் மனித புத்தி மனிதனுக்கு இரண்டு வகை புத்திகள் உண்டு என்பார்கள். ஒன்று சொல் புத்தி மற்றது சுயபுத்தி. சுயபுத்தி என்பது ஒரு மனிதனுக்கு ஏற்கனவே சுயமாக தோன்றக்கூடிய சிந்தனை, சிலர் அதன்படி நடந்து கொள்வார்கள். சொல்புத்தி என்பது அவனுக்கு நண்பர், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள் எடுத்துச் சொல்லும் கருத்தை மனதில் கொண்டு செயல்படுவது. சிலருக்கு சொல் புத்தியும் இருக்காது, சுய புத்தியும் இருக்காது என்பார்கள். தான் நினைத்த முனைப்பில் செயல்படுவதை காண்போம்.

    கல்யாணம் வரை ஆண்மகன் தன் பெற்றோரில் அதுவும் தாயின் பேச்சைக்கேட்டு நடப்பான். திருமணத்துக்குப் பிறகு தன் மனைவியின் புத்தி சிலரை ஆளுகை செய்யும், மனைவி பேச்சை கேட்க ஆரம்பித்து விடுவான். இதனாலேயே அம்மாவுக்கு கோபம் வரும். நம்மால் முடியுமா என்னத்த செய்யப் போகிறோம் வாழ்வில் என்னத்த கண்டோம் என்று எதிர்மறையான எண்ணங்களை மனதில் இருந்து அகற்ற வேண்டும். நான் எப்படி எழுதினாலும் இந்த தடவை பெயில் ஆகி விடுவேன் என்று பேசுபவனை அழைத்துப் பேசி உற்சாகமூட்டி உன்னால் முடியும் தம்பி என்று எடுத்துக் கூற வேண்டும். வாகனங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. சாலைகளை குறை கூறுவோர் சிலர் செய்யும் வேலையை குறை சொல்பவரும் உண்டு, தன் வாகனத்தை காரணம் கூறும் நபர்களும் உண்டு. யாரேனும் நான்தான் கவனக்குறைவாக போய் மோதி விட்டேன் என்று தன் கவனமின்மையை ஒத்துக் கொள்கிறார்களா என்றால் இல்லை. தேர்வில் விடைகளை தேர்வு செய்வதில் கவனமின்றி தவறான விடைகளை எழுதிவிடுவது; நகையிலும், ரொக்கப்பணத்திலும், பெண்ணின் சிவப்பு நிறத்திலும் கவனமாக இருந்து தனக்கு ஏற்ற மனைவியையோ கணவனையோ தேர்ந்தெடுப்பதில் தவறியவர்கள் விதியை காரணம் சொல்வதுண்டு.

    இரவு தூங்காமல் ஓய்வின்றி வாகனம் ஓட்டும் ஓட்டுனர்கள் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விதிப்படி நடந்ததாக விதிகளையும் தனக்கு சாதகமாக்கி பேசுவோரும் உள்ளனர். கணக்கில் கவனமின்றி மறுமுறை சரிபார்க்காமல் பணத்தையும் தவறவிட்டு கவனக்குறைவை ஒத்துக்கொள்ளாமல் விதிப்படி தொலைந்துவிட்டது என்பார்கள். காணாமல் போகும் நகை, பணம், ஆவணங்கள் தனது கவனமின்மை காரணத்தால் என்றும் ஒத்துக் கொண்டவர்கள் எத்தனை பேர்? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். விபத்தில் சிக்கி கால் இழந்தவருக்கு ஆறுதல் கூறுவதற்காக சொல்லலாம். விதி இப்படி ஆகிவிட்டது என்று புலம்பிக் கொண்டே இருப்பதால் பயனில்லை. அந்த விதியையும் நீ வெல்வாய் என்று நேர்மறை எண்ணங்களை அவன் மனதில் வளர்க்கவேண்டும். விதி வலியது என்றால் நம் மனமென்னும் மதி வலியது என்று ஒவ்வொரு மனிதனுக்கும் எடுத்துச் சொல்லவேண்டும் ‘தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ஊழ் என்றழைக்கப்படும் விதியை மனிதன் தன் கூர்மையான மதிநுட்பத்தால் வெல்வது எளிது.

    1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. அதற்கு முன்னதாகவே தீர்க்கதரிசியான மகாகவி பாரதியோ ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடி சென்றானே இந்தியா சுதந்திரமடைந்து அதை பார்க்காமல் பாரதி கண் துயின்றான். விதிப்படி நடக்கும் ஆங்கிலேயனுக்கு அடிமையாகவே இருப்போம் என்று நம் நாட்டு தேசிய தலைவர்கள் சோம்பேறியாக இருந்தால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? ஆகவே விதி வலியது என்று பேசுபவர்களிடம் நம் மதி அதனினும் வலியது என்று கூறி நம்பிக்கை விதையை ஊன்ற வேண்டும். முயற்சி உழைப்பு என்ற உரமிட்டு ஈடுபாடு என்ற ஏர் பாய்ச்சி மனித மனம் எனும் கழனியில் மகிழ்ச்சியைப் பயிரிட்டு உயர்வு எனும் செம்மாந்த நிலையை அடையச் செய்ய வேண்டும். விதியை மதியால் வெல்வோம் என்ற தாரக மந்திரத்தை கல்வித் தலங்கள், கோவில், தனியார், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் எல்லாம் கொட்டை எழுத்துகளில் எழுதி மனித மனங்களுக்கு உற்சாக உயிரூட்ட வேண்டும்.

    Previous Next

    نموذج الاتصال