No results found

    உடல் ஆரோக்கியத்தில் பெண்களின் அலட்சியமும்... ஆபத்தும்...


    புற்றுநோய் பெண்களுக்கு கடும் சவாலாக விளங்கிக்கொண்டிருக்கிறது. பெண்களை தாக்கும் புற்றுநோய்களில் 27 சதவீதம் மார்பக புற்றுநோயாக இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 87 ஆயிரம் பேர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி மரணம் அடைகிறார்கள். கடந்த ஆண்டு 1,62,468 பேர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். உலக அளவில் மார்பக புற்றுநோய்க்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுபோல் இறப்பும் 14 சதவீதம் உயர்ந்துள்ளது. உலக அளவில் 184 நாடுகளில் 140 நாடுகளை சேர்ந்த பெண்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வாழ்நாளில் 28 பெண்களில் ஒரு பெண் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. நகர்புறங்களில் வசிக்கும் பெண்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    கிராமப்புறங்களில் 60 பெண்களில் ஒருவர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானால் நகர்ப்புறங்களில் 22 பெண்களில் ஒரு பெண்ணுக்கு பாதிப்பு நேர்கிறது. மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதுதான் சிகிச்சைக்கு உதவிகரமாக இருக்கும். புற்றுநோய் தாக்குதல் பற்றிய அறிகுறிகளை அறிந் திருப்பதும், அதுபற்றிய விழிப்புணர்வு இருப்பதும் அவசியமானது. முதலில் வலியற்ற கட்டிகள் தோன்றும். அதன்பின்பு வீக்கம், வலி ஏற்பட்டு பாதிப்பை அதிகப்படுத்திவிடும். முந்தைய காலகட்டங்களில் 50 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிக அளவில் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானார்கள். இப்போது வயது பாகுபாடு இன்றி அனைத்து வயது பெண்களும் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.

    கிராமப்புறங்களில் 90 சதவீத பெண்கள் சுய மார்பக பரி சோதனை செய்து கொள்வது பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலையிலேயே இருக்கிறார்கள். வறுமை, அறியாமை, மூட நம்பிக்கை போன்றவை பெண்களின் ஆரோக்கியத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. அது புற்றுநோய் சிகிச்சையையும் தாமதப்படுத்துகிறது. 50 சதவீத கிராமப்புற பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கு ஒத்துழைப்பதில்லை. நோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தாலும் கூட மார்பகங்களில் எந்த வலியும் இல்லை. அதனால் மருத்துவ பரிசோதனை தேவையற்றது என்று அசட்டையாக இருந்து விடுகிறார்கள்.

    Previous Next

    نموذج الاتصال