வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். சிலர் தான் செய்ய நினைத்ததை முழு மனதோடு முயற்சி செய்து வெற்றி பெறுவார்கள். சிலரோ தயக்கம் காரணமாக முயற்சி செய்யாமல் வெற்றியை தவற விடுவார்கள். இவ்வாறு வெற்றிக்கு தடைக்கல்லாக இருக்கும் தயக்கத்தை தவிர்ப்பதற்கான சில வழிகள் இதோ... மற்றவர்களை போல் நாம் இல்லை என தோற்றதையும், திறமையையும் வைத்து பலருக்கும் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் யார் முன்னிலையிலோ, சங்கடப்படுத்தும் பேச்சோ, கேலிகளுக்கோ உள்ளாகி இருந்தால் அது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறான தருணங்கள் உண்டாக்கும் தயக்கம் பயமாக மாறிவிடலாம். எந்த சூழல் அல்லது எந்த விஷயம் உங்களுக்கு தயக்கத்தை பயத்தை தருகிறதோ அதில் இருந்து விலகிப்போகாதீர்கள். அதை முடிந்த அளவிற்கு எதிர்கொண்டு பிரச்சனைகளை சமாளிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
உதாரணமாக உங்களுக்கு மேடை ஏறி தயக்கம் என்றால் கண்ணாடி முன் நின்று அதற்கான தொடர் பயிற்சி எடுக்கலாம். ஆங்கிலம் பேசுவதில் தயக்கம் என்றால் அதற்கான தீர்வை யோசிக்கலாம். இது போன்ற எளிய பயிற்சிகளை பின்பற்றுங்கள். பலருக்கு தங்களது வசிப்பிடத்திலோ, வேலை செய்யும் சூழலிலோ இது போன்ற தயக்கத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும் நபர்கள் இருப்பார்கள். அவர்களை எதிர்கொள்ள முடியாத சூழல் இருந்தால் அந்த இடத்தை விட்டு விலகுவதோ அல்லது இருப்பிடத்தை மாற்றுவதோ நல்லது. மேலே சொன்ன விஷயங்களை எதுவும் கைவிடவில்லை என்றால் தயங்காமல் மருத்துவர்களையோ அல்லது இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு கொடுக்கும் நபரையோ சந்தித்து உரையாடுங்கள். இது தயக்கம் தகர்க்கும் வழியாக உங்களுக்கு அமையும்.