No results found

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் வழிகள்


    வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு வேலை, சம்பாத்தியம், குடும்பம் போன்றவை எவ்வளவு அத்தியாவசியமானதோ, அதே அளவிற்கு ஒருவருக்கு தன் மீதான நம்பிக்கையும் முக்கியமானது. ஏதோ ஒரு கட்டத்தில், ஏதாவது காரணத்தால் நம் மீதான நம்பிக்கை குறையலாம். அதை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து இங்கே பார்ப்போம். உங்கள் மீது கவனம் செலுத்துங்கள்: உங்கள் மீது நீங்கள் கவனம் செலுத்துவது முக்கியமானது. ‘ஆள் பாதி; ஆடை பாதி’ என்பார்கள். அதனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்கள் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணியுங்கள். இது உங்கள் மீதான நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கும். உடைகள் மட்டுமல்ல சிகையலங்காரம், மேக்கப், உடைக்குப் பொருத்தமாக வாட்ச், காலணிகள், நகைகள் என சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் வழக்கத்தை கைவிட்டு, புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பது உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதோடு, தயக்கத்தையும் விட்டொழிக்க உதவும்.

    எதிர்மறை சிந்தனைகளைக் கைவிடுங்கள்: உங்களைப் பற்றி எதிர்மறை கருத்துகளை பிறர் சொன்னாலும், உங்களுக்கே உங்களைப் பற்றி எதிர்மறையாக தோன்றினாலும், அதை சுயபரிசீலனைக்கு உட்படுத்துங்கள். உங்களிடம் இருக்கும் நேர்மறையான விஷயங்கள் பற்றி சிந்தியுங்கள். எதிர்மறையான விஷயங்கள் உங்களை சோர்வுக்கு உள்ளாக்கி தன்னம்பிக்கையைக் குறைக்கிறது என்றால், அதில் இருந்து மீள என்ன வழி என்பதை யோசியுங்கள். நண்பர்களிடமோ அல்லது சரியான நபர்களிடமோ கலந்துரையாடுங்கள். இது உங்களையும் மேம்படுத்துவதுடன், உங்களிடத்தில் தன்னம்பிக்கையையும் அதிகரிக்க செய்யும்.

    பழக்கங்களை மாற்றி அமையுங்கள்: ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் உடல் நிலையை மேம்படுத்த உதவும். நல்ல உடல்நலம் ஆரோக்கியமான மனநிலைக்கு வழிவகுக்கும். அதனால் ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சி மேற்கொள்வது, சருமத்திற்கு தேவையான பராமரிப்பு கொடுப்பது, எதிர்மறை எண்ணங்களை கைவிடுவது போன்றவற்றை கடைப்பிடியுங்கள். வேலைகளில் மந்தமாக இருக்காமல் திட்டமிட்டு செய்யுங்கள். உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி உங்களுக்குப் பிடித்த செயல்களை செய்வது என்பது மிக முக்கியமானது. உங்களுக்கான நேரம் என்பது உங்களைப் பற்றி நீங்கள் சுயபரிசீலனை செய்யவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். புதிய விஷயங்களில் ஈடுபடுங்கள்: வழக்கமாக ஈடுபட்டு வரும் செயல்களில் இருந்து விலகி, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். இது உங்களுடைய திறனை அதிகரிப்பதோடு, சமூகத்தில் உங்கள் நட்பு வட்டத்தையும் விரிவுபடுத்தும். புதிய நண்பர்கள், புதிய சூழல், புதிய வாய்ப்புகள் என்பது உங்கள் வழக்கமான செயல்களில் இருந்து உங்களை விலக்கி புதிய சிந்தனைகளையும், உங்கள் மீதான நம்பிக்கையையும் அதிகரிக்க செய்யும்.

    Previous Next

    نموذج الاتصال