No results found

    பெண்களை அதிகம் பாதிக்கும் ஒற்றைத் தலைவலி


    சிறிய சிறிய செயல்பாடுகளைக் கூட செய்ய முடியாத அளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது தலைவலி. சைனஸ், மனச்சோர்வு, அழுத்தம், மைக்ரேன் மற்றும் கிளஸ்டர் என தலைவலியில் பல வகை உள்ளது. மேலும், தலைப் பகுதியில் வலிக்கும் இடத்தைப்   பொறுத்தும் அதற்கான சிகிச்சை முறை  மாறுபடும். தலைவலியில், நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ‘மைக்ரேன்’ என அழைக்கப்படும் ‘ஒற்றைத் தலைவலி’தான். இதை நரம்பியல் பிரச்சினை என்றும் குறிப்பிடுகிறார்கள். ஒற்றைத் தலைவலி குறித்த ஆய்வில் இதுவரை அதற்கு உறுதியான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு ஹார்மோன் பிரச்சினை அல்லது மூளையில் நரம்பியல் செயல்பாடுகளில் ஏற்படும் அசாதாரண செயல்பாடுகளே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. உலக அளவில் பலரை பாதிக்கும் இரண்டாவது பெரிய உடல்நல பிரச்சினையாக ‘ஒற்றைத் தலைவலி’ இருப்பதாக பல்வேறு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஆண்களை விட, பெண்களையே ஒற்றைத் தலைவலி அதிகம் பாதிக்கிறது. இது குறித்த மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில், அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுக்கும், குறைவான சோடியம் புரோட்டான் எக்ஸ்சேஞ்சர் அளவுக்கும் உள்ள தொடர்பே இந்த மாறுபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், ‘பைபோலார் குறைபாடு’ எனப்படும் இரு துருவ மனச்சோர்வு, மனஅழுத்தம், தீவிர யோசனை, அதீத உணர்ச்சி வெளிப்பாடு, பருவநிலை மாற்றம், சுவாசத் தடை, தொடர்ந்து ஒரு வேளை உணவைத் தவிர்த்தல், அதிக அளவு டீ, காபி குடித்தல், நீண்ட நேரம் வெப்பச் சூழலில் இருப்பது, உடல் நீர்வறட்சி குறைவது, அதீத இரைச்சல், தொடர் உடல் சோர்வு, அழற்சியை ஏற்படுத்தும் வாசனையை நுகருதல், அதீத புழுக்கம், சீரற்ற உணவு முறை, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி போன்ற வாழ்வியல் காரணங்களாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.

    கடுமையான தலைவலி, ஒளியால் ஏற்படும் உணர்திறன், காதில் இரைச்சல் மற்றும் துர்நாற்றம், குமட்டல், வாந்தி, வயிற்று வலி போன்ற வயிறு கோளாறுகள், பசியின்மை, அதீத குளிர்ச்சி அல்லது வியர்வை, சருமம் வெளிர்தல், அசதி, மங்கலான பார்வை மற்றும் காய்ச்சல் போன்றவை ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் ஆகும். ஒற்றைத் தலைவலி சில நிமிடங்களில் தொடங்கி சில நாட்கள் வரை நீடிக்கும். ஒற்றைத் தலைவலிக்கான தீர்வு.. உடலில் சீரான ரத்த ஓட்ட செயல்பாடு, மக்னீசியம், ஒமேகா 3, வைட்டமின் பி2, தாதுக்கள் மற்றும் நுண் சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடலாம். சற்று குளிர்ந்த, அமைதியான இருள் நிறைந்த அறையில் ஓய்வு எடுக்கலாம். தலைவலி உள்ள இடத்தில் குளிர்ந்த அல்லது சூடான பருத்தித் துணியைக்கொண்டு ஒற்றடம் கொடுக்கலாம். கழுத்துக்குப் பின்புறம் லேசான அழுத்தம் கொடுக்கும் வகையில் மசாஜ் செய்யலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மட்டுமே ஒற்றைத் தலைவலிக்கான தீர்வாகும்.

    Previous Next

    نموذج الاتصال