கர்ப்பிணிக்கு வயிறு வலி வந்தாலோ, ரத்த கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து ஸ்கேன் செய்யலாம். ஏற்கெனவே கருசிதைவு ஏற்பட்ட கர்ப்பிணிகள், மருத்துவர் அனுமதியோடு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். சீரற்ற மாதவிலக்கு சுழற்சி இருந்து கர்ப்பமான பெண்களும், அவசியம் ஸ்கேன் செய்து கொள்வது நல்லது. முதல் ஸ்கேனிலேயே இரட்டைக் குழந்தைகளா, குழந்தை பிறக்கும் தினம் ஆகியவற்றைக் கண்டுபிடித்துவிடலாம். அதற்கு அடுத்து, 18-21 வாரங்களில், குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்று பார்க்க இரண்டாவது ஸ்கேன் செய்யப்படும். 20-22 வாரங்களில் எடுக்கும் ஸ்கேனை TARGETTED SCAN, அதாவது குறைபாடுகள் இருக்கிறதா என்பதைக் குறிப்பாக கவனிப்பார்கள்.
28-40 வாரங்களில் சிலருக்கு ஸ்கேன் செய்யச் சொல்வார்கள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தாலோ, குழந்தை சராசரி அளவைவிட பெரிதாகவோ சிறிதாகவோ இருந்தாலோ இதைச் செய்ய வேண்டும். சிலருக்கு வயிறு வழியாக இல்லாமல், பிறப்புறுப்பு வழியாகவும் (Vaginal Scan) எடுக்க வேண்டியதாக இருக்கும். இதனால் கருவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பயம் வேண்டாம். சில பெண்களுக்கு, தொடர்ந்து சிறிய அளவிலான ரத்தப்போக்கு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 32 வாரங்கள் கழித்து இன்னொரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை தேவைப்படலாம். இதில் குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதா, போதுமான எடை கூடியிருக்கிறதா என அறியலாம். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்ற பிரச்னைகள் இல்லாதவர்களுக்கு இந்த ஸ்கேன்வரை எடுத்தாலே போதும். ஒருவேளை ரத்தக்கொதிப்பு, நீரிழிவு இருந்தால் அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து மருத்துவர் பரிந்துரைப்பர்.